Wednesday, June 3, 2020

பஞ்சத்து ஆண்டி


ஒரு வாரம்  திருவிழாவிற்கு என்று வந்த நானும் என் மகளும் மூன்று மாதங்களாக அம்மா அப்பா வீட்டில்  ஊரடங்கு காரணமாக மாட்டிக்கொண்டோம். படிப்பதற்கு புத்தகங்கள் தேடிக்
கொண்டிருந்தேன். தலையணை போல் இருக்கும் புத்தகங்களை பார்த்தாலே  எனக்கு பயம். பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். பெங்களூரில்  இருந்து  வந்திருந்த என் தம்பி அப்படி ஒரு குண்டு  புத்தகத்தை என்னிடம்  கொடுத்து படிக்க சொன்னான். ஒரு கதையை படிக்க சொல்லி, பிடித்தால் தொடரவும் என்றான்.தி. ஜானகிராமன்  சிறுகதைகள்  தொகுப்பு, கதை - சிலிர்ப்பு.கதையில்  ஒன்றுமே இல்லை. வெறும்  ஒரு ரயில் பிரயாணம். அதில் நிகழும் ஒரு சந்திப்பு. அவ்வளவே!அந்த  சந்திப்பை  அத்துணை நுண்ணியமாக  செதுக்கி  படிப்பவர்களை சிலிர்க்க  செய்திருந்தார். தினம் ஒரு கதை என மேலும் படிக்க ஆரம்பித்தேன்.

அம்மா வீடென்பதால்  காலை எனக்கு  9.30-10 மணிக்கு தான் விடியும். அன்று ஏதோ சப்தம்  கேட்டு காலை 7.00 கே விழித்து  கொண்டேன். தெருவில்  ஒரு குரங்காட்டி  நின்றிருந்தான். அந்த அழகான  குட்டி குரங்கு என் அம்மா கொடுத்த வாழைப்பழத்தை  லபக்கி கொண்டிருந்தது. அவர்கள் சென்ற பிறகு அம்மா சொல்லி கொண்டிருந்தார், குரங்காட்டிக்கு  நல்ல வசதியான குடும்பமாம். சொத்துக்கள் அழிஞ்சு போச்சுதென்று... எனக்கோ  பஞ்சத்து ஆண்டியில்  வரும் நன்னையன் ஞாபகம் தான் வந்தது. அந்த குரங்கு வைத்தியலிங்கம் மின்சார கம்பத்தில் அடிபட்டு இறக்காமல் இருந்திருந்தால் இப்படி தான் சுற்றிக்கொண்டிருக்கும் என தோணிற்று. யார் கண்டது இது வைத்தியலிங்கத்தின் மறுபிறவியாக கூட இருக்கலாம். பஞ்சத்து  ஆண்டி  என்று இல்லை. தி.ஜா வின் கதைகள் அனைத்துமே கதைகள்  அல்ல. நிகழ்வுகளும் உரையாடல்களும்  என்று சொல்லலாம். அந்த கதாபாத்திரங்கள் நம்மிடையே கண்டிப்பாக வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். நீங்களோ நானோ  கூட ஒரு கதாபாத்திரமாக இருக்கலாம்.

அவரின்  உலகத்தரமான கதைகளை விமர்சிக்க  என்னால் இயலாது. வியக்க  மட்டுமே முடியும் !

Tuesday, May 7, 2019

தேடல்...


7-5-2019

நேற்று சுட்டெரித்த வெய்யில், இன்று குளிர் குளிர் காற்று.. வாழ்க்கையும் அப்படித்தானே என்று எண்ணிக் கொண்டே ஊர் சுற்றி வர வெளியே சென்றேன்.வழியில் தென்பட்டது கடலை வண்டி.அந்த மணலோடு கடலை வறுபடும் வாசனை என் வண்டிக்கு தானாக பிரேக் போட வைத்தது.என் நினைவுக்கு வந்தார் மன்னார்குடியில் கடலை விற்கும் பாய் தாத்தா.சிடு சிடு வென இருப்பார்.சிரித்து பார்த்ததே இல்லை.நாள் தவறாமல் கடலை வாங்குவேன் அவரிடம்.சாப்பிட்டு முடித்ததும் அந்த பேப்பரில் எழுதியிருப்பதை ரசித்து படிப்பேன்.அது யாரோ ஒரு முகம் தெரியாத மாணவனின் நோட்டு புத்தகமாக இருக்கும்.செய்தித்தாளின் சில பக்கங்களாக கூட இருக்கும்.பல வண்ண செய்திகள் தென்படும்.
இதென்ன blog ல போடற அளவு பெரிய விஷயமா என்று உங்களுக்கு கேட்க தோணலாம்.நிச்சயமாக எனக்கு இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே பெரிய விஷயம்.
கடலை வண்டி டைன் டைன் சத்தம் கேட்டு 50 காசு 1 ருபாய் என்று தேடி எடுத்து ஓடி செல்வேன்.அந்த தேடலின் சுகமே தனி. இந்த தலைமுறைக்கு அந்த தேடுதலும் இல்லை,எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.அந்த தேடுதலும் காத்திருப்பும் மட்டுமே அலாதி ஆனந்தத்தை தரக்கூடியது.

இன்னும் எளிய வார்த்தைல சொல்லனும்னா ஒரு வார்த்தைக்கு 'google' பல அர்த்தங்கள் காண்பிக்கலாம்.இருந்தாலும் அந்த Lifco dictionary புரட்டும் அந்த தேடலின் சுகமே தனிகிறேன் நான்.


பின்குறிப்பு 
என் சின்ன வயசுல கவுன்சிலரா இருந்தவர், சும்மா சுத்திட்டு இருந்தவங்கலாம் இன்னைக்கு அமைச்சரா இருக்காங்க,MLA ஆ இருக்காங்க.ஆனா கடலை வித்துட்டு இருந்த பாய் தாத்தா இன்னும் கடலை தான் விக்கிறார்.Newspaper போட்டுட்டு இருந்தவர் இன்னும் Newspaper தான் போடறார்.பூ விக்கிற பாட்டி 80 வயசாகியும் பூ வித்து தான் சாப்பிடுது.

Monday, February 18, 2019

கேள்விக்குறிகள் - ???


என் கல்லூரி ஜூனியர் /அன்புத்தம்பி சொக்கலிங்கம் சற்று வித்தியாசமான பிறவி.புல்வாமா தாக்குதலுக்கு நாம் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டும் , watsappயில் jaihind மெசேஜ் forward  செய்து கொண்டும்,ஒரு குறிப்பிட்ட மதத்தை குறை சொல்லி கொண்டும் இருந்த நேரத்தில்,அரியலூருக்கு நேரில் சென்று,கார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு இறுதி மரியாதை செலுத்தி திரும்பியுள்ளார்.அவர் அனுப்பிய நெஞ்சை நெகிழ வைக்கும் சில படங்கள் இதோ.

சிவச்சந்திரனின் தந்தை மற்றும் முதல் மகன் ராணுவ உடைகளில்...கட்டிய மனைவி வயிற்றில் குழந்தையுடன்..ஒரு மாற்றுத்திறனாளி தங்கை. கொடுக்கும் லட்சங்களில் எத்தனை லட்சம் அந்த குடும்பத்திற்கு போய் சேருமோ தெரியாது.எத்தனை கோடி கொடுத்தால் என்ன?பித்து பிடித்தவர் போல மகனின் உடையை அணிந்து சுற்றி திரியும் அந்த தந்தைக்கு மகன் கிடைப்பாரா? கண்ணுக்கு எதிரே நிற்கும் தன் மகனின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகி இருக்கும் தருவாயில் வயிற்றில் ஒன்றை சுமர்ந்து கொண்டு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணின் மனநிலை?வாய் பேச வராத மற்றும் காது கேட்காத ,அண்ணனையே நம்பி இருந்த அந்த தங்கையின் நிலைமை?
 உயிரோடு இருந்தும் திராணியற்று சக்தியற்று  குனிந்த இவர்களின்  வாழ்க்கையும்  இனி கேள்விக்குறிகள் தானா ?

Saturday, February 9, 2019

அன்பே சிவம்


அவர் என் மகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆசிரியையாய் இருந்தவர்.அன்பான சிரித்த முகத்துடன் பழக கூடியவர்.ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தை போல எண்ணுபவர்.இன்றும் தினமும் அவரை சென்று சந்திக்க கூடிய பழக்கம் என் மகளுக்கும் அவள் தோழர்களுக்கும் உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.குழந்தைகளை சுண்டி இழுக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உள்ளது என்பதற்கு பொருத்தமான உதாரணம் அவர்.அவருக்கு ஒரு மகள் உண்டு.ஆறு வயது.அடிக்கடி watsapp statusயில் அந்த குழந்தையின் படங்களை பார்த்திருக்கிறேன்.சில தினங்களுக்கு முன் கூட மாறுவேட போட்டியில் பரிசு வாங்கி இருந்தாள்.சற்றும் எதிர்பாரா விதமாய்  கடந்த வாரம் அவளுக்கு blood cancer என தெரிய வந்தது.கடவுளிடம் நிறைய கேள்விகள் கேட்க தோன்றியது.'குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவன் நல்லா இருக்கான்,பொண்ணுங்கள rape பண்றவன் நல்லா இருக்கான்.ஊரை ஏமாத்தி கோடியில் புரளுபவன் நல்லா இருக்கான் ஏன் கடவுளே இந்த பிஞ்சுக்கு இந்த சோதனை ? ' 'ரொம்ப நல்லவங்களா இருக்கவே கூடாதா ?இப்படி தான் சோதிப்பாயா ' என பல கேள்விகள் மனதிற்குள்.இன்னமும் ஓடி கொண்டு தான் இருக்கின்றன.Negativity அதிகரித்தது.இது ஒரு அத்தியாயம்.இந்த அத்தியாயத்தில் கடவுளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்.
என்னை ஆச்சர்ய பட வைத்த அடுத்த அத்தியாயம் இது.Milaap பற்றி எல்லோரும் அறிந்து இருப்பீர்கள்.ஒரு நிதி திரட்டும் நிறுவனம்.நான் அதில் இருந்த linkயை fb,watsappயில் share மட்டும் தான்  செய்தேன்.என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர்  தங்களால் இயன்ற பங்களிப்பை அனுப்பி இருந்தனர்.நாடு,மொழி ,மதம் என எல்லாமே வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் இருந்த அந்த உதவும் மனப்பான்மை கண்டு நான் வியப்படைந்தேன். எனக்கோ தெரிந்த ஒரு நபரின் குழந்தை. ஆனால் அவர்களுக்கு?முகம் தெரியாத ஒரு குழந்தை.எதையும் எதிர்பாராமல் உதவ இத்துணை நல்லுள்ளங்கள் இருக்கிறார்களா ?இதுவரை நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறேன்.ஆனால் இவர்கள் ? என்னை சூழ்ந்திருந்த negativity positive ஆக மாற தொடங்கியது.நாம் நல்லவர்களாக இருந்தால் கண்ணுக்கே தெரியாதவர்கள் கூட நமக்கு உதவி செய்வார்கள் என்று தோன்றியது.இப்படிப்பட்ட நல்லுள்ளங்களின்  பிரார்த்தனையால் அந்த வலிகளை எல்லாம் தாங்கி  கொண்டு மிக விரைவில் சிறகடித்து பறந்து நம்மை ஆனந்த பட வைப்பாள் அந்த பாட்டாம்பூச்சி.இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் நிறைய உதவிகள்  செய்ய வேண்டும் என்று என்னை உணர வைத்த ஒரு நிகழ்வு இது.


Monday, February 4, 2019

குயில் பாட்டு



பாண்டிச்சேரியில் உள்ள இந்த சித்தானந்த சுவாமிகள் ஆலயத்திற்கு பாரதியார் அடிக்கடி வந்தமர்ந்து பாடல்கள் எழுதுவார் என்று கேள்விப்பட்டு காணச்சென்றேன்.கோவிலின் உள்ளே மகாகவி கையில் புத்தகத்துடனும் பேனாவுடனும் கம்பீரமாக வீற்றிருந்தார். அவரை சுற்றி நிறைய சித்தர்கள் இருந்தனர்.இங்கு வந்து சென்ற குயில்களை கண்டு ரசித்து எழுதியது தான் குயில் பாட்டாம்.தை அமாவசை கூட்டத்திலும் இன்று என் காதுகளில் ரீங்காரமிட்டதும் அந்த குயில் பாட்டே!

Monday, January 21, 2019

கோலமாவு கௌசல்யா


நான் விடுமுறைக்கு என் கணவர் இல்லத்திற்கு சென்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது. வரிசையாக பண்டிகைகள் வருகிறது கலர் கோலமாவு வாங்க வேண்டும் என்று தேடிய போது கண்ணில் பட்டாள் இந்த குட்டி சிறுமி. பெயர் கௌசல்யா.தன்  ஏழு வயதில் தனியாக கோல மாவு விற்கிறாள்.அம்மா எங்கே என்று கேட்டதற்கு காய்கறி வியாபாரம் செய்ய சந்தைக்கு சென்றுள்ளார் என்றாள்.பத்து ரூபாய்க்கு ஒரு படி என்று சொல்லிக்கொண்டே கூட ஒரு கைப்பிடி மாவு போடும் அவளின் அழகே அழகு!

அந்த அழகினை ரசிக்க அடுத்த நாளும் அவளை காண சென்றேன்.கூடவே ஒரு குட்டி தம்பியும் இருந்தான்.'இங்கேயே உக்காரு' என்று இரண்டு பிஸ்கட்களை கொடுத்துவிட்டு  ஒரு அட்டை பெட்டியினுள் அவனை அமர்த்திவிட்டு எங்களிடம் வந்தாள்.பிரமித்து போனேன் நான்.

வறுமை கற்றுத்தரும் தைரியமும் தன்னம்பிக்கையும் எந்த International பள்ளியும் கற்று கொடுக்க போவதில்லை! 'கண்ணம்மா'க்களால் நிரம்பிய பூமியில் நான் ரசித்த ஒரு சிறிய 'அக்கினிக்குஞ்சு' :)

                                     

கௌசல்யா,ஒவ்வொரு கோலம் போடும் போதும் உன்னை நினைத்து கொண்டேன்.இந்த முறை நான் போட்ட கோலங்களில் பிரதிபலித்தது வண்ணங்கள் மட்டும் அல்ல,உன் தைரியமும் தன்னம்பிக்கையும் கூட !

Tuesday, January 1, 2019

மிக நீண்ட இடைவெளி...
எழுதாமல் இல்லை.எழுதி எழுதி கிழித்து விடுகிறேன்.
'எழுத்துக்களும்   எண்ணங்களும் ஒருவரின் குழந்தையை போல ,நம் குழந்தையை நாமே வெறுக்கலாமா?' என்று  வருட ஆரம்பத்தில் ஒரு ஞானோதயம்...
ஆக என் டைரியின்'e' பதிப்பு இந்த  ஜனவரியில் இருந்து தொடர்கிறது  :)