Wednesday, July 27, 2011

சமர்ப்பணம்

அம்மா அறிமுகப்படுத்திய 'நட்பு' அது...

மிகவும் அழகானவன் அவன்,

எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடுவான்,

பல மொழிகள் பேசுவான்,

அவன் எந்த மொழி பேசினாலும் எனக்கு அழகாகவே தோன்றும்,

மொழியே பேசாத தருணங்களில் இன்னும் அழகு,

தினமும் சந்திப்போம்...ஒரு மணிநேரமாவது...

அந்த ஒரு மணிநேரத்தில் என் துக்கம்,சந்தோஷம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விடுவேன்

பீறிட்டு வரும் அழுகையை அடக்கி விடுவான்

அடக்கவே முடியாத பேரானந்தத்தையும் கட்டுப்படுத்தி இருக்கிறான் 'இது நிரந்தரம் இல்லை என்று'

சில சமயங்களில் இவனால் சாப்பிட மறந்து விடுவேன் படிப்பதை மறந்து விடுவேன் சாமி கும்பிட கூட மறந்து விடுவேன்

என் நண்பர்களில் பலர் ஏதேதோ காரணங்களுக்காக என்னை விட்டு பிரிந்து இருக்கின்றனர்

யாருமே இல்லாத தருணங்களில் இவன் மட்டும் என்னுடனே இருப்பான்

அதே நண்பர்களுடன் என்னை இணைத்தும் வைத்து இருக்கிறான்

வாழ்க்கையை ரசித்து இருக்கிறேன் இவனுடன்

வானவில்லும் மழைத்துளியும் இன்னும் அழகாக தெரிகிறது இவனால்

நடனமாடி இருக்கிறேன் நன்றாக சமைத்தும் இருக்கிறேன் இவனால்

தெய்வீகத்தையும் குழந்தைத்தனத்தையும் புரியவைத்து இருக்கிறான்

அடிக்கடி பரிசளிப்பான் 'அழகான நினைவுகளை'

என் மகளுக்கும் அறிமுகபடுத்தியாயிற்று

தூங்க வைக்கிறான் சாப்பிட வைக்கிறான் அழுவதை நிறுத்த வைக்கிறான்

யாருக்குமே அடங்காத சமயங்களில் கட்டுப்பட்டு நிற்கிறாள் அவன் முன்

இவன் எனக்கு மட்டும் நண்பன் இல்லை,பலருக்கும் நண்பன்

என்னை விட இவனை பலர் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்

ஆனால் நான் இவனை புரிந்து கொள்ள நினைத்ததே இல்லை

இருந்தும் நான் பெருமை பட்டு கொள்ளலாம் இவன் என் நண்பன் என்று

தைரியமாக சொல்லி கொள்ளலாம் 'என் கடைசி நிமிடம் வரை என்னுடன் இருப்பான்' என்று

இன்று வரை அவனை பெரிதாக பொருட்படுத்தி யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை

பொருட்படுத்தாத காரணங்களுக்காக அவன் என்னை விட்டு விலகியதும் இல்லை

ஆம் என்னை விட்டு விலகாமல் என்னுள் ஐக்கியமான அந்த நண்பன் 'இசை' :)