Sunday, September 18, 2011

காகித பூக்கள்


பிறந்த நாள் - 2011.ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.நேரில்,தொலைபேசியில்,கைபேசியில்,வலைதளத்தில்..ஆனாலும் எனக்கு பிடித்த வாழ்த்து முறையில் ஒரு வாழ்த்து கூட கிடைக்க பெறவில்லை.ஆம்...வாழ்த்து அட்டைகளின் காதலி நான்.நூறு வாழ்த்து அட்டைகள் இருப்பினும் எனக்கேற்றாற் போல்,அட்டையில் உள்ள படத்தையும்,அழகு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து உறவினர்களும்,நண்பர்களும் எனக்கு அனுப்பிய அந்த வாழ்த்து அட்டைகள் காலத்திற்கும் மறக்க முடியாதவை.தபால்காரருக்காக காத்திருப்பதிலிருந்து அவர் எனக்கு தரும் மடல்களை நேர்த்தியாக பிரித்து படித்து சேகரிப்பதிலேயே என் பிறந்தநாள் நிறைந்து விடும்.பிறந்த நாளுக்கு முன் நான்கு நாட்கள் பின் நான்கு நாட்கள் என்று வாழ்த்து மடல்கள் வந்து முடியும் வரை என் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடரும்.அதன் பின் எப்போது எடுத்து பார்த்தாலும் எல்லை இல்லா பேரானந்தம் எனக்கு.சேகரிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல்,அதை விட பன்மடங்கு நேரத்தை செலவிட்டு வாழ்த்து அட்டைகள் செய்து அடுத்தவர்களுக்கு தருவது என் நெடுநாளைய பொழுதுபோக்கு.பொழுதுபோக்கு என்று சொல்வதை விட அதை ஒருவிதமான தியானம் என்றே நான் சொல்வேன்.செய்ய ஆரம்பித்து முடிக்கும் வரை, அதை நான் கொடுக்க போகும் நபருக்கு ஏற்றாற்போல் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைப்பதில் நான் என்னையே சில சமயங்களில் மறந்ததுண்டு.'இதெல்லாம் தேவையா?','சுத்த 'time waste' என்பவர்கள் ஒருபுறம் இருக்க, என் மனதில் நிற்பது வாழ்த்து அட்டையை பெற போகும் நபரின் சந்தோஷம் மட்டுமே.பள்ளி காலத்தில் half yearly leave வந்தாலே பாதி நாட்கள் கிறிஸ்துமஸ்-newyear-பொங்கல் பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வாங்குவதிலேயே சென்றுவிடும்.நடிகர்கள்,தலைவர்கள்,cricketers,கடவுள், என்று அழஅழகான 'Post card Greetings' வாங்கி ஒவ்வொருவருக்கும் பெயர் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி,post செய்வோம்.இப்போதெல்லாம் அப்படிப்பட்ட cards தென்படுவதில்லை.புதுமை விரும்பிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.பழமை touch உள்ள என்போன்றோருக்கு இது ஒரு பேரிழப்பு.நாகரிகமும்,நேரமின்மையும் காணாது அடித்தது இந்த வாழ்த்து மடல்களை மட்டுமல்ல என்போன்றோரின் சின்ன சின்ன சந்தோஷத்தையும் கூட...