Tuesday, March 8, 2011

மாற்றம்


நானும் என் கணவரும் சரவணபவன் சென்றிருந்தோம்.சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு டேபிளில் அமர்ந்தோம்.menu card யில் உள்ள அனைத்து பண்டங்களையும் வாசித்து கொண்டிருந்தேன்.கடைசியில் நான் order செய்ய போவதென்னவோ ரவா மசாலாவும் அடை அவியலும் என்பதை தெரிந்த என் கணவர் அதை முன்னதாகவே order செய்து விட்டார். அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் எங்கள் டேபிளில் வந்து அமர்ந்தான்.மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தான்.அவனை கண்டதும் திரும்பவும் menu card யினுள் மூழ்கினேன்.அவனோ எங்களுக்கு வைத்த டம்ளரிளும் அவன் டம்ளரிளும் தண்ணீர் ஊற்றினான்.அங்கு வேலை செய்யும் யாராவது அவனை வேறு டேபிளுக்கு மாற்றிவிட மாட்டார்களா என்று எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.மாறாக அவனிடம் சிரித்து பழகினர்.மெல்ல என் கணவரிடம் 'நாம வேற டேபிள் போலாமா' என்று கேட்டேன்.அதற்கு அவர் நன்றாக இருக்காது இங்கேயே இருக்கலாம் என்றார்.அந்த சிறுவன் எங்களை பார்த்து சிரித்தான்.என் கணவரிடம் 'வேற டேபிள் போலாம் இல்லை வீட்டுக்கு போலாம்' என்றேன்.பக்கத்துக்கு டேபிளுக்கு மாறினோம்.எங்களையே திரும்பி பார்த்தான் அவன்.சுட சுட ரவா மசாலாவும் அடை அவியலும் பரிமாறப்பட்டது.எங்கள் பழைய இடத்தில் வந்து அமர்ந்தார் அவன் அப்பா.அவன் இட்லி சாப்பிட்டான்.பூரி சாப்பிட்டான்.அனைத்தையும் ரசித்து ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார் அவன் அப்பா.அவன் சாப்பிட்ட தட்டுகளை ஓடி சென்று சர்வரிடம் கொடுத்தான்.கை அலம்பி திரும்பினான்.எங்களை பார்த்து சிரித்து கொண்டே போனான்.அவனது செய்கைகளையே கவனித்து கொண்டிருந்த நான் ருசி கூட அறியாமல் சாப்பிட்டு முடித்து இருந்தேன்.காரில் வந்து அமர்ந்த நான் யோசித்து பார்த்தேன்.

அந்த சிறுவனுக்கும் எனக்கும் என்ன வேற்றுமை?

* நான் சர்வரை சர்வராய் பார்க்கிறேன்.அவனோ வீட்டில் அம்மாவிடம் சாப்பிட்டு விட்டு தட்டு கொடுப்பது போல் அவர்களிடம் கொடுத்தான்.

* நான் ஹோட்டலுக்கு வரும் மனிதர்களை நாகரிக உடை மற்றும் ஆபரணங்களை வைத்து நோட்டமிட்டேன்.அவனோ அனைவரையும் கண்டு புன்னகையிட்டான்.

* நானோ அந்த சிறுவனின் செய்கைகளை ஒரு 15 நிமிடம் கூட பொறுக்க முடியாமல் வேறு டேபிள் மாறினேன்.அவனோ வீட்டிலிருக்கும் மனிதர்களை போல் எங்களை பார்த்து சிரித்தான்.தண்ணீர் ஊற்றினான்.நாங்கள் இடம் மாறியதும் திரும்ப திரும்ப பார்த்தான்.

குழம்பி விட்டேன் நான்.மனநிலை பாதிக்கப்பட்டது எனக்கு தானோ? ஆம் மனிதர்களை மனிதர்களாய் பார்க்காமல் அவர்களின் உடை,நகை,கல்வி இவற்றை வைத்து தரம் பிரிக்கும் மனநிலை எனக்கு தான்.பாதிக்க பட்டது என் மனநிலை தான்.அந்த சிறுவனிடம் சிரித்து பழகிய சர்வர்களையும், managerரையும் நினைத்து பார்த்தேன்.என்ன படித்து இருப்பார்கள் இவர்கள்? அவர்களை விட இரு மடங்கு படித்த எனக்கு அந்த பண்பு இல்லையே? படிப்பிற்கும் பண்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என்று நினைக்க தோன்றியது.

அழகான தங்கள் குழந்தைகளை மேலும் அலங்காரம் செய்து ஒவ்வொரு வாரமும் வெளியே அழைத்து செல்லும் பெற்றோரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட அவன் அப்பா, தன் மகனின் மகிழ்ச்சிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவனை ரசித்த அவர் எனக்கு real time hero வாக தெரிந்தார்.

வாழ்க்கையின் பகற்றை அகற்றி மனிதர்களை நேசிக்க கற்று கொடுத்த இந்த இனிய மாலை நேரம் என் மனதில் என்றென்றும் இருக்கும்.