Wednesday, June 22, 2011

அறம் பொருள் இன்பம்


ஞாயிறு காலை திருவேற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.வழி நெடுக போஸ்டர்களும் banner களும் வரவேற்றன.பழம் பெரும் நடிகர் ஒருவரின் வீட்டு திருமண விழா நடந்து கொண்டிருந்தது.முதலமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.காரின் உள்ளே இருந்து எட்டி பார்த்து கொண்டே சென்றேன்.மண்டப செட்டிங்காக மட்டும் சில பல ஏக்கரை வளைத்து போட்டிருந்தனர்.ஒரு நவீன அரண்மனை போல காட்சியளித்தது அந்த மண்டபம்.கண்களுக்கு தென்பட்ட இவற்றை தவிர மற்ற மேடை அலங்காரம்,மணப்பெண் புடவை,நகைகள்,மேக்கப்,பிரபலங்கள் வருகை,தடபுடல் சாப்பாடு போன்றவற்றை நானே கற்பனை செய்து கொண்டிருந்தேன்.கோவில் வந்ததே தெரியாமல் costly கற்பனையில் மூழ்கி இருந்த என்னை தட்டி எழுப்பினார் என் கணவர்.ஏதோ ஒரு உணர்வு என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது.பொறாமை?ஏக்கம்?பிரம்மிப்பு?ஆசை? சொல்ல தெரியவில்லை.எல்லாம் கலந்த ஒரு புது விதமான எண்ணம்.அந்த திருமண விழாவை தாண்டி வந்ததன் வினை.என் கணவரிடம் அந்த திருமணத்தை பற்றியே பேசி கொண்டிருந்தேன்.முகூர்த்த நாள் என்பதால் சிறப்பு தரிசன வரிசையிலும் நிரம்பி வழிந்தது கூட்டம்.கோவிலில் கிட்ட தட்ட 20 திருமணங்கள் நடக்க இருப்பதாக வரிசையில் நின்றோர் பேசி கொண்டிருந்தனர். பூசாரி, ஒரு மணபெண் கையில் இருந்த முகூர்த்த புடவையும்,தாலியையும் அம்மன் காலில் வைத்து பூஜித்து கொடுத்தார்.முகூர்த்த நேரம் நெருங்குவதால் அதை வாங்கி கொண்டு ஓடினாள் அந்த பெண்.காதில் ஜிமிக்கி,கழுத்தில் ஒரு செயின்,கை நிறைய கண்ணாடி வளையல்கள்,தலை நிறைய மல்லிகை மற்றும் கனகாம்பர பூக்கள்.
Platinum வைர நகைகள்,முகபூச்சு,உதட்டு சாயம்,என்று ஏகப்பட்ட விடுபட்ட வித்தியாசங்கள் என் கற்பனை costly மணப்பெண்ணுக்கும்,இவளுக்கும்.ஆனாலும் கற்பனையில் வந்தவளை கலைத்து விட்டு போட்டியில் ஜெயித்து விட்டு சென்றிருந்தாள்.அம்மனை தரிசித்து பிரகாரம் சுற்றி கொண்டிருந்தோம்.திருமண கெட்டி மேள ஓசை விடாமல் கேட்டு கொண்டே இருந்தது.ஒரு வழியாக parking இடத்திற்கு வந்தோம்.அங்கே ஒரு மரத்தடியில் ஒரு திருமண கோஷ்டி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.மொத்தமே பத்து பேர்,பக்கத்திலேயே இரண்டு share auto,ஒவ்வொருவர் கையிலும் ஒரு தட்டு,சப்பாத்தியும் தேங்காய் துவையலும்.மண மக்கள் கையிலும் அதே தான்.அங்கிருந்த ஒருவர் மணமகனை ஊட்டி விட சொல்ல மணப்பெண் சிரித்து முகத்தை திருப்பி கொண்டாள்.ரொம்ப அழகான காட்சி அது.அந்த நவீன அரண்மனை யை விட பன்மடங்கு அழகு.சொல்ல தெரியாத அந்த துஷ்ட எண்ணங்களை அழித்த 'எளிமை'க்கு நூறு நன்றிகளை மனதிற்குள் தெரிவித்து கொண்டு,மெல்ல என் கணவரிடம் கூறினேன்..'ஏங்க எப்படி கல்யாணம் பண்ணினா என்னங்க,வாழ போற இரண்டு பேரும் வாழ்த்தர இதயங்களும் தான் முக்கியம்' என்று. புரிஞ்சா சேரி வண்டில ஏறு என்பது போல புன்னகைத்தார் அவர்.Costly கனவு கலைந்து இதயத்தின் கணம் குறைந்திருந்த நிம்மதியுடன் அமர்ந்தேன்.

Tuesday, June 7, 2011

மொழி


பிறந்தது முதலே புன்னகையால் மட்டுமே பேசி கொண்டிருந்த எனக்கு மெல்ல தமிழ் மொழியை ஊட்டினாள் தாய்.அத்தை பேசினார் 'மதுரை' தமிழ்.பக்கத்து வீட்டு ரோசி ஆன்ட்டி பேசினார் 'நெல்லை' தமிழ்.வெவ்வேறு 'தமிழ்'கள் ஒரு தமிழ் ஆனது.சுந்தர தெலுங்கு தான்,என் குடும்பத்தினர் பேசுவார்கள் தான்.கேட்டு கேட்டு தலை ஆட்டியதோடு சரி,ஏனோ வாயில் நுழைய மறுத்து விட்டது.பள்ளி சென்ற போது,ஆசிரியர்கள் திணித்தனர் ஆங்கிலத்தை.பேசாவிட்டால் 'பைன்'கட்ட வேண்டிய கட்டாய ஆங்கிலம் வெறுக்கப்பட்டது எங்களால்.கல்லூரி சென்றேன்.வேற்று கிரகத்திற்கு மாற்றப்பட்டு விட்டோமோ என்ற மலைப்பு.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி.கை கொடுத்தது ஆங்கிலம் மட்டும் தான்.மெல்ல கை கோர்த்தார்கள் அண்டை மாநிலத்தார்.தமிழுடன் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு சேர்ந்து கொண்டது.ஒட்டுதலும் உறசலுமாய் திராவிடம் ஜெயித்தது, என் மொழி தென்இந்திய மொழி ஆனது.'உன் மொழி எதுவானால் என்ன?எங்களுக்கு தேவை அதனினும் மேன்பட்ட உன் நட்பு' என்று என்னை அங்கீகரித்து அரவணைத்தார்கள் என் வடஇந்திய தோழிகள்.அந்த நட்பை கௌரவப்படுத்த கற்று கொண்டேன் 'ஹிந்தி'யை.தேவைப்படும் போதெல்லாம் 'ஹிந்தி' யை வெட்டி தட்டி முட்டி மோதி சற்று நீட்டி முழக்கி ஒப்பேத்தி கொள்வேன். குஜராத்தி, மராத்தி,ஒரியா வந்துவிடும்.என்னை பொறுத்தவரை 90% பெங்காலிகள் கலைநயம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள் என்பேன்.ஆடல்,பாடல்,பேச்சு,ஓவியம்,எழுத்து என்று ஒன்றிலாவது தங்களை specialize செய்து கொள்வார்கள்.அதனாலேயே அந்த மொழியின் மேல் எனக்கு தனி பிரியம். 'கீதாஞ்சலி' படித்து இருக்கிறேன்.ஆங்கிலத்தில் எழுத பட்டாலும் அந்த வங்காள உணர்வை நான் பல முறை ரசித்து இருக்கிறேன்.ஒரு மனதாக ஆனேன் 'இந்திய பெண்'.திருமணம் முடித்து பாண்டிச்சேரி சென்ற போது அடித்த 'பிரெஞ்சு' காற்று இன்று எனக்கு நான்கு வாக்கியங்களை கற்று தந்துள்ளது.இதை தவிர கணினி மொழிகள் ஒன்றிரண்டு,என் மகள் பேசும் மழலை மொழி,என் வயதான பாட்டியுடன் பேசிய சைகை மொழி ஆகியவைகளும் கற்றுகொண்டாகிவிட்டது.மொழிப்பாடம் எனக்கு கர்ப்பித்தது இதைத்தான் " உலகத்தில் எல்லோருமே பேசக்கூடிய பொது மொழி யை பேசு என்று.அது என்ன என்கிறீர்களா?நான் முதல் முதலாய் பேசிய மொழி.. இதயத்தின் அடியாழத்தில் இருந்து வெளிப்படும் 'புன்னகை'.