Monday, January 21, 2019

கோலமாவு கௌசல்யா


நான் விடுமுறைக்கு என் கணவர் இல்லத்திற்கு சென்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது. வரிசையாக பண்டிகைகள் வருகிறது கலர் கோலமாவு வாங்க வேண்டும் என்று தேடிய போது கண்ணில் பட்டாள் இந்த குட்டி சிறுமி. பெயர் கௌசல்யா.தன்  ஏழு வயதில் தனியாக கோல மாவு விற்கிறாள்.அம்மா எங்கே என்று கேட்டதற்கு காய்கறி வியாபாரம் செய்ய சந்தைக்கு சென்றுள்ளார் என்றாள்.பத்து ரூபாய்க்கு ஒரு படி என்று சொல்லிக்கொண்டே கூட ஒரு கைப்பிடி மாவு போடும் அவளின் அழகே அழகு!

அந்த அழகினை ரசிக்க அடுத்த நாளும் அவளை காண சென்றேன்.கூடவே ஒரு குட்டி தம்பியும் இருந்தான்.'இங்கேயே உக்காரு' என்று இரண்டு பிஸ்கட்களை கொடுத்துவிட்டு  ஒரு அட்டை பெட்டியினுள் அவனை அமர்த்திவிட்டு எங்களிடம் வந்தாள்.பிரமித்து போனேன் நான்.

வறுமை கற்றுத்தரும் தைரியமும் தன்னம்பிக்கையும் எந்த International பள்ளியும் கற்று கொடுக்க போவதில்லை! 'கண்ணம்மா'க்களால் நிரம்பிய பூமியில் நான் ரசித்த ஒரு சிறிய 'அக்கினிக்குஞ்சு' :)

                                     

கௌசல்யா,ஒவ்வொரு கோலம் போடும் போதும் உன்னை நினைத்து கொண்டேன்.இந்த முறை நான் போட்ட கோலங்களில் பிரதிபலித்தது வண்ணங்கள் மட்டும் அல்ல,உன் தைரியமும் தன்னம்பிக்கையும் கூட !

Tuesday, January 1, 2019

மிக நீண்ட இடைவெளி...
எழுதாமல் இல்லை.எழுதி எழுதி கிழித்து விடுகிறேன்.
'எழுத்துக்களும்   எண்ணங்களும் ஒருவரின் குழந்தையை போல ,நம் குழந்தையை நாமே வெறுக்கலாமா?' என்று  வருட ஆரம்பத்தில் ஒரு ஞானோதயம்...
ஆக என் டைரியின்'e' பதிப்பு இந்த  ஜனவரியில் இருந்து தொடர்கிறது  :)