Thursday, February 10, 2011

வலியின் சங்கீதம்


என் பதினோராம் வகுப்புகள் ஆரம்பித்து இருந்த நேரம் அது.என் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து கொண்டு இருந்த ஒரு டீச்சரிடம் chemistry கற்று கொள்ள ஆரம்பித்தேன்.அவ்விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் சிலரும் என்னுடன் சேர்ந்து அந்த டீச்சரிடம் tuition படித்தனர்.எங்கள் 7 பேரில் நான் மட்டுமே english medium என்ற கவுரவம் + கர்வம் என்னை கொஞ்சம் ஆட வைத்தது.ஆனால் அந்த டீச்சர் சொல்லி கொடுத்த principle களும்,law களும் என்னை விட தமிழில் படித்த அந்த ஆறு பேருக்கு நன்றாக புரிந்தது என்னவோ வேறு விஷயம்.அவர்கள் அனைவருமே பக்கத்தில் உள்ள சிறிய கிராமங்களை சேர்ந்தவர்கள்.புள்ளவாராயண் குடிகாடு,பூதமங்கலம்,இடும்பாவனம் என்ற அந்த ஊர்களை என் வாயில் நுழையாதபடி பாசாங்கு செய்து கொண்டிருப்பேன்.அவர்களில் ஒருத்தி தான் மகரஜோதி.அவள் ஊர் இடும்பாவனம்.குக்கிராமம் எனலாம்.நீங்க google பண்ணினாலும் கண்டு பிடிக்க முடியாது.

ஜோதி மிகவும் மௌனமான பெண்.நானோ மெளனமாக இருப்பவர்களை வெறுப்பவள்.அந்த வெறுப்பின் காரணம் பொறாமையாக கூட இருக்கலாம்.என்னால் அரை நிமிடம் கூட மெளனமாக இருக்க முடியவில்லையே என்று பொறாமை.அவளுக்கும் என் மீது வெறுப்பு இருந்திருக்கலாம்.எப்படியோ இந்த 'எதிர்மறை வெறுப்புகள்' விருப்புக்கள் ஆகி நாங்கள் இருவரும் தோழிகள் ஆனோம்.பிறகு தான் அந்த மௌனத்தின் காரணம் தெரிந்தது.அவள் தன் தாயை ஆறு மாதங்களுக்கு முன் பறி கொடுத்தவள் என்றும்.அவளுக்கு இரண்டு தங்கைகள் ஒரு தம்பி என்றும்.அவளது லட்சியம் 'டாக்டர் ஆவது' அதுவும் 'இடும்பாவனம் டாக்டர் ஆவது'.தன் தம்பி தங்கைகளை படிக்க வைப்பது.எனக்கோ ஆச்சரியம்..ஏனெனில் எந்த சீட் கிடைக்குதோ அதை லட்சியமாகிக்கலாம் என்று நான் நினைத்து கொண்டிருந்த காலம் அது.

ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் அப்பாவை அழைத்து வந்தாள்.தன்னை ஒரு ஐயப்ப பக்தராக காண்பித்து கொண்டார் அவர்.அவரின் உடம்பு முழுவதும் பட்டைகளும்,நாமங்களும் நிரம்பி வழிந்தன.எனக்கு பொதுவாக 'பித்தர்களை போலிருக்கும் பக்தர்களை' பிடிக்காது.அதனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது பொருளில்லை.உன்னுடன் கலந்து உள்ள கடவுளை ஊருக்கு காட்டவேண்டியது இல்லை என்று நினைப்பவள் நான்.

நான் நினைத்தது போலவே அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு செய்தி.ஜோதியின் அப்பா விற்கு மறுமணம்.காரணம் - நான்கு குழந்தைகள் மற்றும் வீட்டு சாப்பாடு.அந்த பெண் ஜோதியை விட இரண்டு வயது மூத்தவள்.இடிந்து போனாள் ஜோதி.தனக்குள் அவள் கொண்டிருந்த லட்சியங்கள் அனைத்தும் ஒரு சேர அவளை பயமுடுத்தியது.எங்கே தோற்று விடுவோமோ என்ற அந்த பயத்தினாலேயே அவள் பெற்ற மதிப்பெண்கள் 793.நானாக இருந்தால் பாஸ் கூட பண்ணி இருக்க மாட்டேன்.இரண்டாம் கட்ட மதிப்பெண்கள் அவளை ஊருக்கே திருப்பி அனுப்பியது.தாயின் இழப்பு,தந்தையின் மறுமணம்,தன் வயதில் ஒரு தாய்,தம்பி தங்கைகள் எதிர்காலம்...உங்களால் தாங்க முடியுமா ?

பெண் தொடர்ந்து குடும்பம்,நண்பர்கள் மற்றும் தன்னை சுற்றிய சமூகத்தால் எப்படி புரிந்து கொள்ள முடியாதபடி போகிறாள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என் தோழியின் வாழ்க்கை.

அதன் பின் அவள் என்ன ஆனாள் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.அது ஒரு பேரதிர்ச்சி.அவள் தந்தை தூக்கு போட்டு இறந்து விட்டார் என்றும்,அவளுக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை என்றும்,கடந்த சில வருடங்களுக்கு முன் அவளது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்றும்,தன் கணவர் வேலை செய்த பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறாள் எனவும், அவள் தங்கி படித்த விடுதியின் மூலம் தெரிய வந்தது.கைபேசி,தொலைபேசி என்று எந்த நம்பரும் கிடைக்க வில்லை.

கிடைத்தால் கூட அவளை அமைதி படுத்த கூடிய வார்த்தைகள் என்னிடம் இல்லை.

'கஷ்டங்களே வாழ்க்கை' என்று இன்றும் ஜோதி போல் பலரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டங்களை தூக்கி எறியுங்கள்.நன்றி சொல்லுங்கள் கடவுளுக்கு... 'பித்தனாய்' அல்ல.பக்தனாய் அதுவும் மெளனமாக.

ஜோதியின் இத்தனை இழப்புகளும் வேறொரு தளத்தின் வெற்றிகளாய் மலரும் எதிர்நாளில்,வளர்ந்து நிற்கும் அவள் மகள் தன் தாயினை எண்ணி பூரிப்படைவாள் அல்லவா? இழப்புகள் வெற்றிகளாகட்டும்.

காத்திருக்கிறேன் நான்.மகிழவும்... வாழ்த்தவும்...