Sunday, September 18, 2011

காகித பூக்கள்


பிறந்த நாள் - 2011.ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.நேரில்,தொலைபேசியில்,கைபேசியில்,வலைதளத்தில்..ஆனாலும் எனக்கு பிடித்த வாழ்த்து முறையில் ஒரு வாழ்த்து கூட கிடைக்க பெறவில்லை.ஆம்...வாழ்த்து அட்டைகளின் காதலி நான்.நூறு வாழ்த்து அட்டைகள் இருப்பினும் எனக்கேற்றாற் போல்,அட்டையில் உள்ள படத்தையும்,அழகு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து உறவினர்களும்,நண்பர்களும் எனக்கு அனுப்பிய அந்த வாழ்த்து அட்டைகள் காலத்திற்கும் மறக்க முடியாதவை.தபால்காரருக்காக காத்திருப்பதிலிருந்து அவர் எனக்கு தரும் மடல்களை நேர்த்தியாக பிரித்து படித்து சேகரிப்பதிலேயே என் பிறந்தநாள் நிறைந்து விடும்.பிறந்த நாளுக்கு முன் நான்கு நாட்கள் பின் நான்கு நாட்கள் என்று வாழ்த்து மடல்கள் வந்து முடியும் வரை என் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடரும்.அதன் பின் எப்போது எடுத்து பார்த்தாலும் எல்லை இல்லா பேரானந்தம் எனக்கு.சேகரிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல்,அதை விட பன்மடங்கு நேரத்தை செலவிட்டு வாழ்த்து அட்டைகள் செய்து அடுத்தவர்களுக்கு தருவது என் நெடுநாளைய பொழுதுபோக்கு.பொழுதுபோக்கு என்று சொல்வதை விட அதை ஒருவிதமான தியானம் என்றே நான் சொல்வேன்.செய்ய ஆரம்பித்து முடிக்கும் வரை, அதை நான் கொடுக்க போகும் நபருக்கு ஏற்றாற்போல் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைப்பதில் நான் என்னையே சில சமயங்களில் மறந்ததுண்டு.'இதெல்லாம் தேவையா?','சுத்த 'time waste' என்பவர்கள் ஒருபுறம் இருக்க, என் மனதில் நிற்பது வாழ்த்து அட்டையை பெற போகும் நபரின் சந்தோஷம் மட்டுமே.பள்ளி காலத்தில் half yearly leave வந்தாலே பாதி நாட்கள் கிறிஸ்துமஸ்-newyear-பொங்கல் பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வாங்குவதிலேயே சென்றுவிடும்.நடிகர்கள்,தலைவர்கள்,cricketers,கடவுள், என்று அழஅழகான 'Post card Greetings' வாங்கி ஒவ்வொருவருக்கும் பெயர் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி,post செய்வோம்.இப்போதெல்லாம் அப்படிப்பட்ட cards தென்படுவதில்லை.புதுமை விரும்பிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.பழமை touch உள்ள என்போன்றோருக்கு இது ஒரு பேரிழப்பு.நாகரிகமும்,நேரமின்மையும் காணாது அடித்தது இந்த வாழ்த்து மடல்களை மட்டுமல்ல என்போன்றோரின் சின்ன சின்ன சந்தோஷத்தையும் கூட...

Wednesday, July 27, 2011

சமர்ப்பணம்

அம்மா அறிமுகப்படுத்திய 'நட்பு' அது...

மிகவும் அழகானவன் அவன்,

எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடுவான்,

பல மொழிகள் பேசுவான்,

அவன் எந்த மொழி பேசினாலும் எனக்கு அழகாகவே தோன்றும்,

மொழியே பேசாத தருணங்களில் இன்னும் அழகு,

தினமும் சந்திப்போம்...ஒரு மணிநேரமாவது...

அந்த ஒரு மணிநேரத்தில் என் துக்கம்,சந்தோஷம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விடுவேன்

பீறிட்டு வரும் அழுகையை அடக்கி விடுவான்

அடக்கவே முடியாத பேரானந்தத்தையும் கட்டுப்படுத்தி இருக்கிறான் 'இது நிரந்தரம் இல்லை என்று'

சில சமயங்களில் இவனால் சாப்பிட மறந்து விடுவேன் படிப்பதை மறந்து விடுவேன் சாமி கும்பிட கூட மறந்து விடுவேன்

என் நண்பர்களில் பலர் ஏதேதோ காரணங்களுக்காக என்னை விட்டு பிரிந்து இருக்கின்றனர்

யாருமே இல்லாத தருணங்களில் இவன் மட்டும் என்னுடனே இருப்பான்

அதே நண்பர்களுடன் என்னை இணைத்தும் வைத்து இருக்கிறான்

வாழ்க்கையை ரசித்து இருக்கிறேன் இவனுடன்

வானவில்லும் மழைத்துளியும் இன்னும் அழகாக தெரிகிறது இவனால்

நடனமாடி இருக்கிறேன் நன்றாக சமைத்தும் இருக்கிறேன் இவனால்

தெய்வீகத்தையும் குழந்தைத்தனத்தையும் புரியவைத்து இருக்கிறான்

அடிக்கடி பரிசளிப்பான் 'அழகான நினைவுகளை'

என் மகளுக்கும் அறிமுகபடுத்தியாயிற்று

தூங்க வைக்கிறான் சாப்பிட வைக்கிறான் அழுவதை நிறுத்த வைக்கிறான்

யாருக்குமே அடங்காத சமயங்களில் கட்டுப்பட்டு நிற்கிறாள் அவன் முன்

இவன் எனக்கு மட்டும் நண்பன் இல்லை,பலருக்கும் நண்பன்

என்னை விட இவனை பலர் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்

ஆனால் நான் இவனை புரிந்து கொள்ள நினைத்ததே இல்லை

இருந்தும் நான் பெருமை பட்டு கொள்ளலாம் இவன் என் நண்பன் என்று

தைரியமாக சொல்லி கொள்ளலாம் 'என் கடைசி நிமிடம் வரை என்னுடன் இருப்பான்' என்று

இன்று வரை அவனை பெரிதாக பொருட்படுத்தி யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை

பொருட்படுத்தாத காரணங்களுக்காக அவன் என்னை விட்டு விலகியதும் இல்லை

ஆம் என்னை விட்டு விலகாமல் என்னுள் ஐக்கியமான அந்த நண்பன் 'இசை' :)

Wednesday, June 22, 2011

அறம் பொருள் இன்பம்


ஞாயிறு காலை திருவேற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.வழி நெடுக போஸ்டர்களும் banner களும் வரவேற்றன.பழம் பெரும் நடிகர் ஒருவரின் வீட்டு திருமண விழா நடந்து கொண்டிருந்தது.முதலமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.காரின் உள்ளே இருந்து எட்டி பார்த்து கொண்டே சென்றேன்.மண்டப செட்டிங்காக மட்டும் சில பல ஏக்கரை வளைத்து போட்டிருந்தனர்.ஒரு நவீன அரண்மனை போல காட்சியளித்தது அந்த மண்டபம்.கண்களுக்கு தென்பட்ட இவற்றை தவிர மற்ற மேடை அலங்காரம்,மணப்பெண் புடவை,நகைகள்,மேக்கப்,பிரபலங்கள் வருகை,தடபுடல் சாப்பாடு போன்றவற்றை நானே கற்பனை செய்து கொண்டிருந்தேன்.கோவில் வந்ததே தெரியாமல் costly கற்பனையில் மூழ்கி இருந்த என்னை தட்டி எழுப்பினார் என் கணவர்.ஏதோ ஒரு உணர்வு என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது.பொறாமை?ஏக்கம்?பிரம்மிப்பு?ஆசை? சொல்ல தெரியவில்லை.எல்லாம் கலந்த ஒரு புது விதமான எண்ணம்.அந்த திருமண விழாவை தாண்டி வந்ததன் வினை.என் கணவரிடம் அந்த திருமணத்தை பற்றியே பேசி கொண்டிருந்தேன்.முகூர்த்த நாள் என்பதால் சிறப்பு தரிசன வரிசையிலும் நிரம்பி வழிந்தது கூட்டம்.கோவிலில் கிட்ட தட்ட 20 திருமணங்கள் நடக்க இருப்பதாக வரிசையில் நின்றோர் பேசி கொண்டிருந்தனர். பூசாரி, ஒரு மணபெண் கையில் இருந்த முகூர்த்த புடவையும்,தாலியையும் அம்மன் காலில் வைத்து பூஜித்து கொடுத்தார்.முகூர்த்த நேரம் நெருங்குவதால் அதை வாங்கி கொண்டு ஓடினாள் அந்த பெண்.காதில் ஜிமிக்கி,கழுத்தில் ஒரு செயின்,கை நிறைய கண்ணாடி வளையல்கள்,தலை நிறைய மல்லிகை மற்றும் கனகாம்பர பூக்கள்.
Platinum வைர நகைகள்,முகபூச்சு,உதட்டு சாயம்,என்று ஏகப்பட்ட விடுபட்ட வித்தியாசங்கள் என் கற்பனை costly மணப்பெண்ணுக்கும்,இவளுக்கும்.ஆனாலும் கற்பனையில் வந்தவளை கலைத்து விட்டு போட்டியில் ஜெயித்து விட்டு சென்றிருந்தாள்.அம்மனை தரிசித்து பிரகாரம் சுற்றி கொண்டிருந்தோம்.திருமண கெட்டி மேள ஓசை விடாமல் கேட்டு கொண்டே இருந்தது.ஒரு வழியாக parking இடத்திற்கு வந்தோம்.அங்கே ஒரு மரத்தடியில் ஒரு திருமண கோஷ்டி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.மொத்தமே பத்து பேர்,பக்கத்திலேயே இரண்டு share auto,ஒவ்வொருவர் கையிலும் ஒரு தட்டு,சப்பாத்தியும் தேங்காய் துவையலும்.மண மக்கள் கையிலும் அதே தான்.அங்கிருந்த ஒருவர் மணமகனை ஊட்டி விட சொல்ல மணப்பெண் சிரித்து முகத்தை திருப்பி கொண்டாள்.ரொம்ப அழகான காட்சி அது.அந்த நவீன அரண்மனை யை விட பன்மடங்கு அழகு.சொல்ல தெரியாத அந்த துஷ்ட எண்ணங்களை அழித்த 'எளிமை'க்கு நூறு நன்றிகளை மனதிற்குள் தெரிவித்து கொண்டு,மெல்ல என் கணவரிடம் கூறினேன்..'ஏங்க எப்படி கல்யாணம் பண்ணினா என்னங்க,வாழ போற இரண்டு பேரும் வாழ்த்தர இதயங்களும் தான் முக்கியம்' என்று. புரிஞ்சா சேரி வண்டில ஏறு என்பது போல புன்னகைத்தார் அவர்.Costly கனவு கலைந்து இதயத்தின் கணம் குறைந்திருந்த நிம்மதியுடன் அமர்ந்தேன்.

Tuesday, June 7, 2011

மொழி


பிறந்தது முதலே புன்னகையால் மட்டுமே பேசி கொண்டிருந்த எனக்கு மெல்ல தமிழ் மொழியை ஊட்டினாள் தாய்.அத்தை பேசினார் 'மதுரை' தமிழ்.பக்கத்து வீட்டு ரோசி ஆன்ட்டி பேசினார் 'நெல்லை' தமிழ்.வெவ்வேறு 'தமிழ்'கள் ஒரு தமிழ் ஆனது.சுந்தர தெலுங்கு தான்,என் குடும்பத்தினர் பேசுவார்கள் தான்.கேட்டு கேட்டு தலை ஆட்டியதோடு சரி,ஏனோ வாயில் நுழைய மறுத்து விட்டது.பள்ளி சென்ற போது,ஆசிரியர்கள் திணித்தனர் ஆங்கிலத்தை.பேசாவிட்டால் 'பைன்'கட்ட வேண்டிய கட்டாய ஆங்கிலம் வெறுக்கப்பட்டது எங்களால்.கல்லூரி சென்றேன்.வேற்று கிரகத்திற்கு மாற்றப்பட்டு விட்டோமோ என்ற மலைப்பு.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி.கை கொடுத்தது ஆங்கிலம் மட்டும் தான்.மெல்ல கை கோர்த்தார்கள் அண்டை மாநிலத்தார்.தமிழுடன் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு சேர்ந்து கொண்டது.ஒட்டுதலும் உறசலுமாய் திராவிடம் ஜெயித்தது, என் மொழி தென்இந்திய மொழி ஆனது.'உன் மொழி எதுவானால் என்ன?எங்களுக்கு தேவை அதனினும் மேன்பட்ட உன் நட்பு' என்று என்னை அங்கீகரித்து அரவணைத்தார்கள் என் வடஇந்திய தோழிகள்.அந்த நட்பை கௌரவப்படுத்த கற்று கொண்டேன் 'ஹிந்தி'யை.தேவைப்படும் போதெல்லாம் 'ஹிந்தி' யை வெட்டி தட்டி முட்டி மோதி சற்று நீட்டி முழக்கி ஒப்பேத்தி கொள்வேன். குஜராத்தி, மராத்தி,ஒரியா வந்துவிடும்.என்னை பொறுத்தவரை 90% பெங்காலிகள் கலைநயம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள் என்பேன்.ஆடல்,பாடல்,பேச்சு,ஓவியம்,எழுத்து என்று ஒன்றிலாவது தங்களை specialize செய்து கொள்வார்கள்.அதனாலேயே அந்த மொழியின் மேல் எனக்கு தனி பிரியம். 'கீதாஞ்சலி' படித்து இருக்கிறேன்.ஆங்கிலத்தில் எழுத பட்டாலும் அந்த வங்காள உணர்வை நான் பல முறை ரசித்து இருக்கிறேன்.ஒரு மனதாக ஆனேன் 'இந்திய பெண்'.திருமணம் முடித்து பாண்டிச்சேரி சென்ற போது அடித்த 'பிரெஞ்சு' காற்று இன்று எனக்கு நான்கு வாக்கியங்களை கற்று தந்துள்ளது.இதை தவிர கணினி மொழிகள் ஒன்றிரண்டு,என் மகள் பேசும் மழலை மொழி,என் வயதான பாட்டியுடன் பேசிய சைகை மொழி ஆகியவைகளும் கற்றுகொண்டாகிவிட்டது.மொழிப்பாடம் எனக்கு கர்ப்பித்தது இதைத்தான் " உலகத்தில் எல்லோருமே பேசக்கூடிய பொது மொழி யை பேசு என்று.அது என்ன என்கிறீர்களா?நான் முதல் முதலாய் பேசிய மொழி.. இதயத்தின் அடியாழத்தில் இருந்து வெளிப்படும் 'புன்னகை'.

Sunday, May 22, 2011

பூ பூக்கும் மாசம்




Balcony யில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.கொளுத்தும் வெயிலிலும் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர்.எனக்கு மட்டுமில்லை,எல்லோருக்குமே பள்ளி நாட்களில் மிகவும் இனிமையானது கோடை கால விடுமுறை நாட்களாக தான் இருக்க முடியும்.புதுப்புது இடங்கள்,புதுப்புது விளையாட்டுக்கள்,புதுப்புது நண்பர்கள் நமக்கு அறிமுகமாகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் சிதம்பரத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுவிடுவோம்.அமைதியான சூழலில் அழகான வீடு,வீட்டை சுற்றி தோட்டம்,வாசலிலேயே வரவேற்கும் கலர் கலர் போகன்வில்லா.மாமாக்கள், சித்தி என்று அனைவரும் வந்து விடுவர்.நாங்கள் மொத்தம் 9 cousins.எத்தனை பேர் வந்தாலும் சமைத்து அசத்துவதில் என் பாட்டி தான் benchmark. அதை நோக்கி அவரின் மகள்களும் மருமகள்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட மீன் குழம்பை இது வரை யாரும் செய்த பாடில்லை.ஒரு தட்டு சாதத்திற்கு ஒரு ஸ்பூன் குழம்பு போதும்.thickness,கலர்,காரம்,உப்பு எல்லாமே perfect.மீன் குழம்பு மட்டுமில்லை,ஒரு பீன்ஸ் பொரியல் செய்தால் கூட அதை அவ்வளவு ரசித்து ஸ்டைல் ஆக வெட்டி சமைப்பார்.அவரிடம் தான் கற்று கொண்டேன் சமைப்பதற்கு முக்கிய ingredient 'ரசனை' என்று.வீட்டிலிருக்கும் போதெல்லாம் ஊட்டிவிட்டால் கூட சாப்பிட அழும் நாங்கள்,பாட்டி வீட்டில் மட்டும் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவோம். ஒன்றாக தான் எழுவோம்,விளையாடுவோம்,சாப்பிடுவோம்,சுத்துவோம்,தூங்குவோம்.Cousins are your very first friends.... யாரவது மறுக்க இயலுமா?

காலை சீக்கிரமே எழுந்து கொண்டாக வேண்டும்.டிகாசன் காபியை ரசித்து குடித்து விட்டு ,பல் விளக்கி கொண்டே தோட்டத்தில் உள்ள தக்காளி,மிளகாய்,கத்திரிக்காய்களை எண்ணி கொண்டே மாந்தோப்பிற்கு செல்வோம்.அங்கே உள்ள தண்ணீர் தொட்டியில் விளையாடுவோம்.அதில் பாதி நனைந்த நாங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் அடிக்க வைத்து இருக்கும் tube யில் விளையாடுவோம்.முடிந்தது குளியல்.பூஜைக்காக செம்பருத்தி பறித்து கொடுப்போம்.செம்பருத்தி தோட்டத்தில் எப்போதுமே சிவப்பு கலரும்,வெள்ளை கலரும் இருக்கும்.எப்போதாவது பிங்க் கலரும்,மஞ்சள் கலரும் பூக்கும்.

பொழுதுகள் சற்று சீக்கிரமாகவே கழிந்து விடும் விடுமுறை நாட்களில்.அடிக்கடி calender பார்த்து கொள்வேன்.கூடவே பள்ளியில் கொடுத்த assignment பயமுறுத்தும்.ஊருக்கு போய் முதல் ஒரு வாரம் ஸ்கூல் க்கு லீவ் போட்டுட்டு அந்த ஒரு வாரத்தில் assignment முடிக்கலாமா என்று ஒவ்வொரு முறையும் plan போட்ட என்னை நினைத்து நானே சிரித்து கொள்வேன்.

அவ்வப்போது எங்களது தாத்தா செல்லமாக மிரட்டுவார்,அவரது மிரட்டல்கள் பேரன்களுக்கு மட்டும் தான்.பேத்திகள் ஐஸ் வைத்து தப்பித்து விடுவோம்.எங்களை entertain பண்ண அவ்வப்போது deck க்கும் புது படங்களும் ஆளை விட்டு எடுத்து வர சொல்லி போட்டு காண்பிப்பார்.Family Pack ஐஸ்கிரீம் வாங்கி தருவார்.மாலை நேரங்களில் தெருகோடியில் உள்ள மண்முட்டில் எல்லோரும் விளையாட சென்று விடுவர்.நான் மட்டும் வீட்டு வாசலில் உள்ள அந்த மஞ்சள் பூக்களை ரசித்து கொண்டிருப்பேன்.வெளிர்ந்த பச்சை நிற இலைகளின் ஆங்காங்கே தெரியும் அந்த மஞ்சள் பூக்களின் பெயர் கொன்னப்பூ .இப்போது அந்த பூக்களை எங்கேயாவது பார்த்தால் கூட பால்யத்தை நோக்கி ஓட துவங்கும் மனது.

நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது 'சித்ரா பௌர்ணமி'.வீட்டில் ஒரு நாட்டியாஞ்சலியே நடக்கும்.ஒரு வாரத்திற்கு முன்பே rehearsal ஆரம்பித்து விடுவோம்.ஆடி களைத்த எங்களை boost up செய்வது 'Rasna'.கையில் எழுதி கலர் செய்த invitationகள் கொடுக்கப்படும்.கூடவே பணமும் வசூலிக்கப்படும்.இந்த நிகழ்ச்சிக்கு எப்போதுமே தலைமை தாங்குபவர் 'எங்கள் தாத்தா' தான்.இதை காரணம் காட்டி அதிக பணம் பிடுங்கி விடுவோம்.'சித்ரா பௌர்ணமி' அன்று dance program முடிந்த பிறகு எல்லோரும் ஒன்றாக 'சித்ரா அன்னம்' சாப்பிடுவோம்.

விவரிக்கவும் விவாதிக்கவும் இன்னும் பல..விடுபட்டவைகளில் இதோ சில..

தாத்தாவும் கூட்ஸ் வண்டியும்,பெட்டி கடை chik shampoo ஷாப்பிங்,சிவபுரி ரோஜாக்கள், மடப்பள்ளி பிரசாதம்,அவ்வாவின் மாங்கா தொக்கு ,சீசர் நாய்,fan சண்டை ,கிரிக்கெட் hero வும் அவரின் ரசிகர்(கை)களும் ,fridge யில் வைத்த வெள்ளரி பழம்,2808,

சொல்லி கொண்டே போகலாம்.ஒவ்வொரு முறையும் ஊர் திரும்பும் போதும் காசு தருவார் தாத்தா.அதை விட இரு மடங்கு காசு ஏற்கனவே தந்து இருப்பார் பாட்டி.இந்த அன்பு ஒன்று மட்டுமே என்றைக்குமே மாறாத அழகான நினைவுகளை தருகிறது.நினைவுகளை விட சிறந்த பரிசு எதுவாக இருக்க முடியும்? என் குடும்பத்தினருக்கு பரிசளிக்கிறேன் இந்த நினைவுகளை....

Sunday, May 8, 2011

தாயுமானவள்


அன்னையர் தினம் இன்று.Facebook யிலும் SMS யிலும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.தொலைக்காட்சி யிலும் அம்மா பாடல்கள் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்தது.ரசித்து கொண்டிருந்தேன் நான்.என் வீட்டு பணிப்பெண் உள்ளே நுழைந்தாள்.வழக்கத்திற்கு மாறாக இன்று சுறுசுறுப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

நான்: என்ன எங்கயாச்சும் வெளில போறியா?

அவள்: இல்ல அக்கா.சனி ஞாயிறு மட்டும் அடுத்த தெருல ஒருத்தோங்க வேலைக்கு கூப்டு இருகாங்க.அதான் போலாம் னு ...

நான்: ஹ்ம்ம் ஏற்கனவே நெறைய வீட்ல வேலை செய்ற.இது வேறயா?

அவள்: என் பொண்ணு டிவி ல வர்ற பாட்டெல்லாம் நல்லா பாடுதுனு பாட்டு கிளாஸ் ல சேத்து விட்டு இருக்கேன் கா.அதனால தான் கா போறேன்.அவ அப்பா உயிரோட இருந்தா இதெலாம் செஞ்சு இருப்பார்னு அவ நெனச்சுட கூடாது பாருங்க...

நான்:சரி சரி இந்த இட்லி ய சாப்டுட்டு வேலைய பாரு.

அவள்:அக்கா என் பையன் லீவ் ல வீட்ல தான் இருக்கான்.எதாச்சும் தின்ன கேட்டுட்டே இருப்பான். Box ல எடுத்துட்டு போறேன் கா.அவன் சாப்டுவான்.

தோற்று விட்டேன் அந்த பெண்ணிடம்.அதுவரை அன்னையர் தின கேளிக்கைகளை ரசித்து கொண்டிருந்த நான்,முதன் முறையாக உணர்வுடன் பார்க்க ஆரம்பித்தேன்.குழந்தைகளுக்காக தன் உழைப்பையே பரிசாக தரும் அந்த தாய் உண்மையில் ஒரு super mom தான்.


Friday, April 1, 2011

வரிக்குதிரை


வெள்ளை தாள் கறுப்பு பேனா
நடுராத்திரி நிலா
இரட்டை ஜடை பின்னல் வெள்ளை ரிப்பன்
நீதி தேவதை பொம்மை
கல்லூரியின் black n white day
மெய் பொய் கலந்த விழிகள்
பாவ மன்னிப்பு சிவாஜி கணேசன்
கரும்பலகை chalk piece
chess board என்று....

என் விருப்பங்கள் அனைத்திலும் கலந்திருப்பது கறுப்பும் வெள்ளையும். இவ்வாறாக என் கறுப்பு வெள்ளை விருப்பங்களில் முதலிடம் பெறுவது என் சிறு வயது புகைப்படங்கள்.ஆம் என் புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை என் சிறு வயது கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்.'All the credit goes to the photographer' என்று ஒரு வரியில் கூறி முடிக்க இயலாது.அந்த photoகள்,அதன் பின் எழுதப்பட்டுள்ள தேதி,மாதம்,வருடம் மற்றும் என் வயது எல்லாம் நான் ஒவ்வொரு முறை அவைகளை பார்க்கும் போதும் என்னை பிரமிக்க வைக்கின்றன.என் மாமா Prof.RK தான் இந்த photoகளின் சொந்தகாரர்.அவர் வயதில் இளைஞர்கள் செய்யும் 'வேலை'களை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு புகைப்பட கலைக்காக அவர் செலவிட்ட நேரங்கள் மிக அதிகம்.நாட்டியாஞ்சலி,இயற்கை காட்சிகள் என்று இன்றும் அவர் எடுத்த ஒவ்வொரு கறுப்பு வெள்ளை படமும் ஒரு காவியம்.கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டு என்று அவை நிரூபித்தன.

இப்படித்தான் ஆரம்பித்தது என் கறுப்பு வெள்ளை காதல்.என்ன தான் உள்ளது இந்த black n white யில் என கொஞ்சம் சுய ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அந்த புகைப்படங்களில் என் கண்ணுக்கு தெரிவது மூன்று மட்டுமே.. கறுப்பு,வெள்ளை மற்றும் அந்த புகைப்படத்தின் ஏதோ ஒரு நோக்கம்.என் monochrome மூளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிந்து கொள்ளும் திறன் தான் உள்ளது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.சிலருக்கு கனவுகள் மட்டும் கறுப்பு வெள்ளை யில் காண்பர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.என் கனவுகளின் நிறம் என்ன என்பது எனக்கு நினைவில்லை. 'கறுப்பு வெள்ளை' விருப்பம் என் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்ததை உணர்ந்தேன்.ஆம் நான் மனிதர்களையும் இரண்டு விதமாக காண தொடங்கி இருந்தேன்.நல்லவர்கள்.கெட்டவர்கள்.இதில் நல்லவர்கள் சிலநேரம் கெட்டவர்களாயினர்.கெட்டவர்கள் சிலநேரம் நல்லவர்களாயினர்.நல்லவர்களை முழுவதும் நம்பினேன்.கெட்டவர்களை முழுவதும் வெறுத்து ஒதுக்கினேன்.என் முழு நம்பிக்கை வீணான காலங்களில் நல்லவர்கள் கெட்டவர்களாயினர்.என் அதீத வெறுப்பு அலுத்த நேரங்களில் கெட்டவர்கள் நல்லவர்களாயினர்.இப்படியான சுழற்சியில் என் காலமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை.ஆனாலும் ஒரே நபரை இரண்டு(இரண்டே)வண்ணங்களில் காண கஷ்டமாக இருந்தது.அதையும் தாண்டி அவர்களின் பல்வேறு ரூபங்களை (வண்ணங்களை) என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.சட்டென்று என் மகளின் கையிலுள்ள சிலேட் பல்பத்தை பிடுங்கினேன்.மாறாக அவளுக்கு வண்ண சாக்பீசு களை கொடுத்தேன்.அவளாவது வாழ்க்கையில் வண்ணங்களை அதிகம் பயன்படுத்தடுமே என்று.

இந்த பதிப்பை முடிக்கும் தருவாயில் என் கறுப்பு வெள்ளை காதலில் ஒரு சின்ன தடுமாற்றம்.
ஆம் என் தலையில் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள் எட்டி பார்க்கின்றன.

Tuesday, March 8, 2011

மாற்றம்


நானும் என் கணவரும் சரவணபவன் சென்றிருந்தோம்.சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு டேபிளில் அமர்ந்தோம்.menu card யில் உள்ள அனைத்து பண்டங்களையும் வாசித்து கொண்டிருந்தேன்.கடைசியில் நான் order செய்ய போவதென்னவோ ரவா மசாலாவும் அடை அவியலும் என்பதை தெரிந்த என் கணவர் அதை முன்னதாகவே order செய்து விட்டார். அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் எங்கள் டேபிளில் வந்து அமர்ந்தான்.மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தான்.அவனை கண்டதும் திரும்பவும் menu card யினுள் மூழ்கினேன்.அவனோ எங்களுக்கு வைத்த டம்ளரிளும் அவன் டம்ளரிளும் தண்ணீர் ஊற்றினான்.அங்கு வேலை செய்யும் யாராவது அவனை வேறு டேபிளுக்கு மாற்றிவிட மாட்டார்களா என்று எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.மாறாக அவனிடம் சிரித்து பழகினர்.மெல்ல என் கணவரிடம் 'நாம வேற டேபிள் போலாமா' என்று கேட்டேன்.அதற்கு அவர் நன்றாக இருக்காது இங்கேயே இருக்கலாம் என்றார்.அந்த சிறுவன் எங்களை பார்த்து சிரித்தான்.என் கணவரிடம் 'வேற டேபிள் போலாம் இல்லை வீட்டுக்கு போலாம்' என்றேன்.பக்கத்துக்கு டேபிளுக்கு மாறினோம்.எங்களையே திரும்பி பார்த்தான் அவன்.சுட சுட ரவா மசாலாவும் அடை அவியலும் பரிமாறப்பட்டது.எங்கள் பழைய இடத்தில் வந்து அமர்ந்தார் அவன் அப்பா.அவன் இட்லி சாப்பிட்டான்.பூரி சாப்பிட்டான்.அனைத்தையும் ரசித்து ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார் அவன் அப்பா.அவன் சாப்பிட்ட தட்டுகளை ஓடி சென்று சர்வரிடம் கொடுத்தான்.கை அலம்பி திரும்பினான்.எங்களை பார்த்து சிரித்து கொண்டே போனான்.அவனது செய்கைகளையே கவனித்து கொண்டிருந்த நான் ருசி கூட அறியாமல் சாப்பிட்டு முடித்து இருந்தேன்.காரில் வந்து அமர்ந்த நான் யோசித்து பார்த்தேன்.

அந்த சிறுவனுக்கும் எனக்கும் என்ன வேற்றுமை?

* நான் சர்வரை சர்வராய் பார்க்கிறேன்.அவனோ வீட்டில் அம்மாவிடம் சாப்பிட்டு விட்டு தட்டு கொடுப்பது போல் அவர்களிடம் கொடுத்தான்.

* நான் ஹோட்டலுக்கு வரும் மனிதர்களை நாகரிக உடை மற்றும் ஆபரணங்களை வைத்து நோட்டமிட்டேன்.அவனோ அனைவரையும் கண்டு புன்னகையிட்டான்.

* நானோ அந்த சிறுவனின் செய்கைகளை ஒரு 15 நிமிடம் கூட பொறுக்க முடியாமல் வேறு டேபிள் மாறினேன்.அவனோ வீட்டிலிருக்கும் மனிதர்களை போல் எங்களை பார்த்து சிரித்தான்.தண்ணீர் ஊற்றினான்.நாங்கள் இடம் மாறியதும் திரும்ப திரும்ப பார்த்தான்.

குழம்பி விட்டேன் நான்.மனநிலை பாதிக்கப்பட்டது எனக்கு தானோ? ஆம் மனிதர்களை மனிதர்களாய் பார்க்காமல் அவர்களின் உடை,நகை,கல்வி இவற்றை வைத்து தரம் பிரிக்கும் மனநிலை எனக்கு தான்.பாதிக்க பட்டது என் மனநிலை தான்.அந்த சிறுவனிடம் சிரித்து பழகிய சர்வர்களையும், managerரையும் நினைத்து பார்த்தேன்.என்ன படித்து இருப்பார்கள் இவர்கள்? அவர்களை விட இரு மடங்கு படித்த எனக்கு அந்த பண்பு இல்லையே? படிப்பிற்கும் பண்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என்று நினைக்க தோன்றியது.

அழகான தங்கள் குழந்தைகளை மேலும் அலங்காரம் செய்து ஒவ்வொரு வாரமும் வெளியே அழைத்து செல்லும் பெற்றோரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட அவன் அப்பா, தன் மகனின் மகிழ்ச்சிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவனை ரசித்த அவர் எனக்கு real time hero வாக தெரிந்தார்.

வாழ்க்கையின் பகற்றை அகற்றி மனிதர்களை நேசிக்க கற்று கொடுத்த இந்த இனிய மாலை நேரம் என் மனதில் என்றென்றும் இருக்கும்.

Thursday, February 10, 2011

வலியின் சங்கீதம்


என் பதினோராம் வகுப்புகள் ஆரம்பித்து இருந்த நேரம் அது.என் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து கொண்டு இருந்த ஒரு டீச்சரிடம் chemistry கற்று கொள்ள ஆரம்பித்தேன்.அவ்விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் சிலரும் என்னுடன் சேர்ந்து அந்த டீச்சரிடம் tuition படித்தனர்.எங்கள் 7 பேரில் நான் மட்டுமே english medium என்ற கவுரவம் + கர்வம் என்னை கொஞ்சம் ஆட வைத்தது.ஆனால் அந்த டீச்சர் சொல்லி கொடுத்த principle களும்,law களும் என்னை விட தமிழில் படித்த அந்த ஆறு பேருக்கு நன்றாக புரிந்தது என்னவோ வேறு விஷயம்.அவர்கள் அனைவருமே பக்கத்தில் உள்ள சிறிய கிராமங்களை சேர்ந்தவர்கள்.புள்ளவாராயண் குடிகாடு,பூதமங்கலம்,இடும்பாவனம் என்ற அந்த ஊர்களை என் வாயில் நுழையாதபடி பாசாங்கு செய்து கொண்டிருப்பேன்.அவர்களில் ஒருத்தி தான் மகரஜோதி.அவள் ஊர் இடும்பாவனம்.குக்கிராமம் எனலாம்.நீங்க google பண்ணினாலும் கண்டு பிடிக்க முடியாது.

ஜோதி மிகவும் மௌனமான பெண்.நானோ மெளனமாக இருப்பவர்களை வெறுப்பவள்.அந்த வெறுப்பின் காரணம் பொறாமையாக கூட இருக்கலாம்.என்னால் அரை நிமிடம் கூட மெளனமாக இருக்க முடியவில்லையே என்று பொறாமை.அவளுக்கும் என் மீது வெறுப்பு இருந்திருக்கலாம்.எப்படியோ இந்த 'எதிர்மறை வெறுப்புகள்' விருப்புக்கள் ஆகி நாங்கள் இருவரும் தோழிகள் ஆனோம்.பிறகு தான் அந்த மௌனத்தின் காரணம் தெரிந்தது.அவள் தன் தாயை ஆறு மாதங்களுக்கு முன் பறி கொடுத்தவள் என்றும்.அவளுக்கு இரண்டு தங்கைகள் ஒரு தம்பி என்றும்.அவளது லட்சியம் 'டாக்டர் ஆவது' அதுவும் 'இடும்பாவனம் டாக்டர் ஆவது'.தன் தம்பி தங்கைகளை படிக்க வைப்பது.எனக்கோ ஆச்சரியம்..ஏனெனில் எந்த சீட் கிடைக்குதோ அதை லட்சியமாகிக்கலாம் என்று நான் நினைத்து கொண்டிருந்த காலம் அது.

ஒரு நாள் என் வீட்டிற்கு அவள் அப்பாவை அழைத்து வந்தாள்.தன்னை ஒரு ஐயப்ப பக்தராக காண்பித்து கொண்டார் அவர்.அவரின் உடம்பு முழுவதும் பட்டைகளும்,நாமங்களும் நிரம்பி வழிந்தன.எனக்கு பொதுவாக 'பித்தர்களை போலிருக்கும் பக்தர்களை' பிடிக்காது.அதனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது பொருளில்லை.உன்னுடன் கலந்து உள்ள கடவுளை ஊருக்கு காட்டவேண்டியது இல்லை என்று நினைப்பவள் நான்.

நான் நினைத்தது போலவே அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு செய்தி.ஜோதியின் அப்பா விற்கு மறுமணம்.காரணம் - நான்கு குழந்தைகள் மற்றும் வீட்டு சாப்பாடு.அந்த பெண் ஜோதியை விட இரண்டு வயது மூத்தவள்.இடிந்து போனாள் ஜோதி.தனக்குள் அவள் கொண்டிருந்த லட்சியங்கள் அனைத்தும் ஒரு சேர அவளை பயமுடுத்தியது.எங்கே தோற்று விடுவோமோ என்ற அந்த பயத்தினாலேயே அவள் பெற்ற மதிப்பெண்கள் 793.நானாக இருந்தால் பாஸ் கூட பண்ணி இருக்க மாட்டேன்.இரண்டாம் கட்ட மதிப்பெண்கள் அவளை ஊருக்கே திருப்பி அனுப்பியது.தாயின் இழப்பு,தந்தையின் மறுமணம்,தன் வயதில் ஒரு தாய்,தம்பி தங்கைகள் எதிர்காலம்...உங்களால் தாங்க முடியுமா ?

பெண் தொடர்ந்து குடும்பம்,நண்பர்கள் மற்றும் தன்னை சுற்றிய சமூகத்தால் எப்படி புரிந்து கொள்ள முடியாதபடி போகிறாள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என் தோழியின் வாழ்க்கை.

அதன் பின் அவள் என்ன ஆனாள் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.அது ஒரு பேரதிர்ச்சி.அவள் தந்தை தூக்கு போட்டு இறந்து விட்டார் என்றும்,அவளுக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை என்றும்,கடந்த சில வருடங்களுக்கு முன் அவளது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்றும்,தன் கணவர் வேலை செய்த பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறாள் எனவும், அவள் தங்கி படித்த விடுதியின் மூலம் தெரிய வந்தது.கைபேசி,தொலைபேசி என்று எந்த நம்பரும் கிடைக்க வில்லை.

கிடைத்தால் கூட அவளை அமைதி படுத்த கூடிய வார்த்தைகள் என்னிடம் இல்லை.

'கஷ்டங்களே வாழ்க்கை' என்று இன்றும் ஜோதி போல் பலரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டங்களை தூக்கி எறியுங்கள்.நன்றி சொல்லுங்கள் கடவுளுக்கு... 'பித்தனாய்' அல்ல.பக்தனாய் அதுவும் மெளனமாக.

ஜோதியின் இத்தனை இழப்புகளும் வேறொரு தளத்தின் வெற்றிகளாய் மலரும் எதிர்நாளில்,வளர்ந்து நிற்கும் அவள் மகள் தன் தாயினை எண்ணி பூரிப்படைவாள் அல்லவா? இழப்புகள் வெற்றிகளாகட்டும்.

காத்திருக்கிறேன் நான்.மகிழவும்... வாழ்த்தவும்...

Friday, January 14, 2011

மார்கழியில் ஒரு காலை...


மார்கழி 01 ,1995
5.05 am

அரை பரிட்சைக்காக வைத்த அலார ஓசைக்கு முன் ஒரு இனிய ஓசை கேட்டது. 'டிங்சக் டிங்சக்' என்ற அந்த மெல்லிய ஓசை வேறெதுவும் இல்லை.பஜனை குழுவை சேர்ந்தது தான்.'ச்சச 5.30 க்கு எழுந்துரிக்கலாம்னா முன்னாடியே disturb பண்ணிட்டாங்களே' என்று திரும்பவும் போர்வைக்குள் புகுந்தேன் நான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் 'ரம்மி படிக்கணும்னியே எழுந்திரி 'என்று காலை வருடினார் என் பாட்டி.'இதுக்கு அந்த பஜனை கோஷ்டியே தேவல' என்று முணுமுணுத்தபடி எழுந்தேன் நான்.பல் விளக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்த போது 'அல்லா...'என்ற தொழுகை சத்தம் என் வீட்டு பின்னால் இருக்கும் மசூதியில் இருந்து ஒலித்தது.அட மணி 5.30 ஆ என்று அவசர அவசரமாக முகத்தை அலம்பியபடி திண்ணைக்கு வந்தேன்.

வாசற்பூட்டு திறக்கப்பட்டு இருந்தது.கதவை திறந்து வெளியே வந்த என்னை சில்லென்ற குளிர் காற்று அள்ளி சென்றது."மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் மிக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனை சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. " என்று தமிழ் வாத்தியார் நடத்திய " தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்"பாடம் நினைவிற்கு வந்தது.

'மப்ளர் போடாம வெளியே நிக்காதே டா' ன்னு ஒரு கையில் மப்ளரும் மறு கையில் காபியை யும் நீட்டினார் என் பாட்டி.'இதென்ன ரெண்டாவது டிகாஷனா?' என்று ஒரே மடக்கில் காபியை குடித்த என்னை பாவமாக பார்த்த என் பாட்டியின் பெயர் ஆண்டாள். அட இந்த பெயர் கூட மார்கழியுடன் ஒத்து போகிறதே.

' படிச்சு முடிச்சுயா?' என்ற படி என்னிடம் வந்தார் என் அம்மா.' English II தான் ம்மா Non-detail மட்டும் ஒரு glance விட்டா போதும்.மத்த letter writing,hints developing லாம் நான் பாத்துப்பேன்.சரி நீ சீக்கிரம் கோலம் போட்டுட்டு சொல்லு,நான் கலர் குடுக்கறேன்' என்றேன்.

எனக்கு பிடித்த பூஜை கூடை கோலம் போட்டு இருந்தார் என் அம்மா.ஆஞ்சேநேயர் கோவிலுக்கு வெண்பொங்கல் வாளி போகிறதா என்று நோட்டமிட்ட படி ஒரு வழியாக கலர் போட்டு முடித்த நான், என் non-detail book யினை திறந்தேன்.

'அம்மா....... பால் ' என்ற பால்காரர் சத்தம் கேட்டு ஓடி சென்று கோலத்தை பார்த்தேன்.'நல்ல வேளை மிதிபடவில்லை'

'ஐயோ அடுத்து பேப்பர் பையன் வருவானே' என்ற பயத்துடன் வெளியிலேயே chair போட்டு படிக்க ஆரம்பித்தேன். கொண்டை நிறைய டிசம்பர் பூக்களை சூடி வந்தார் என் வீட்டில் வேலை செய்யும் லட்சுமி.அவரிடம் 'ஏன் இவ்ளோ லேட்?கோலத்தை மிதிக்காம உள்ளே போங்க' என்றேன்.

ஒரு வழியாக ஸ்கூல் புறப்பட்ட என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது 'non-detail ' அல்ல.' கலர் கோலம்' மட்டுமே.சாயங்காலம் வரை அதை யாரேனும் மிதித்து கலைத்து விட போகிறார்களோ என்ற கவலை மட்டுமே.

--------------------------------------------------------------------------------------------
மார்கழி 01, 2011


தெருவை அடைத்து நிற்கும் அழகு கோலங்கள்

பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து அதில் செருகிய பரங்கிப்பூ

ஆஞ்சநேய கோவிலின் தொன்னை பொங்கல்

கலர் கலராய் டிசம்பர் பூக்கள் ....



எதையுமே காண முடிய வில்லை சென்னை மாநகரத்தில்.....



என்ன தான் இன்று உங்கள் வீடுகளில் inverter போட்டாலும் உங்கள் மனம் அந்த பழைய மின்வெட்டு இருளையும்,candle வெளிச்சத்தையும் நினைத்து பார்க்காமலா போய்விடும்?



அப்படித்தான் இதுவும்.

Friday, January 7, 2011

அம்மா


அம்மா - இவ்வார்த்தையை ஆயிரம் முறை சொல்லிருக்கிறேன்..பிறர் கூற கேட்டும் இருக்கிறேன்..இன்று மட்டும் என் மகள் கூற கேட்கும் போது சற்று மாறுபட்டு தோணுகிறதே? அப்படி என்ன இருக்கிறது இந்த 'அம்மா'வில்? அதுவும் மற்ற உறவுகளை போல ஒரு உறவு.அவ்வளவு தானே? அப்பா கூடத்தான் நாள் முழுவதும் உழைக்கிறார்.சகோதரி கூடத்தான் நாளெல்லாம் உயிர் தோழியாய் இருக்கிறாள்.அண்ணன் தம்பியிடம் மட்டும் பாசத்திற்கு குறைவா என்ன? அப்புறம் ஏன் அம்மாவுக்கு முதன்மை பட்டம் ?
அன்று புரியவில்லை. cricket பார்த்து கொண்டே 'பசிக்குது அம்மா' என்று சொல்லி முடிப்பதற்குள் சுட சுட ரசசாதமும், உருளைகிழங்கு வறுவல் என் முன்னே இருக்கும். 'தின்பது' முதல் 'திருமணம்' வரை என் விருப்பம் தான் என் அம்மாவின் விருப்பம். 'இவ்ளோ தூரமா படிக்க அனுப்புவாங்க? ' என்று ஊரே கேட்கும் போதும், நான் ஒவ்வொரு முறை கல்லூரிக்கு செல்லும் போதும் சிரித்து கொண்டே வழி அனுப்புவார் என் அம்மா.ஆனாலும் இதெலாம் அவர் கடமை அல்லவா? இதற்காக first rank கொடுத்து விட முடியுமா என்ன?அன்று புரிய வில்லை.
இன்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறேன்.
என் மகள் மூலமாக...
ஐந்தாறு அடி அடித்தாலும் அழுது கொண்டே என்னை பிடித்து கொண்டு அவள் உறங்கும் போதும்..
தயிர் சாதமே ஆனாலும் என் கையால் தரும்போது இரண்டு வாய் அதிகமாக அவள் சாப்பிடும் போதும்...
வெளியில் சென்று திரும்பும் என்னை பார்க்க 'ஈ ஈ ' என்று இளித்து கொண்டு ஓடி வரும் அந்த கன்னக்குழி சிரிப்பு என் முதலிடத்தை எனக்கு புரிய வைத்து விட்டது.
இப்போதுதான் புரிகிறது
என் அம்மா அவர் அம்மா விடம் ஒரு நாளைக்கு தொலைபேசியில் 20 தடவையாவது ஏன் பேசுகிறார் என்று....
இப்போதுதான் புரிகிறது
என் கணவர் ஏன் நான் எவ்வளவு ருசியாக சமைத்தாலும் 'என் அம்மா செய்றதுல உப்பு காரம் எல்லாம் கரெக்டா இருக்கும்' என்று சொல்கிறார் என்று...
இப்போதுதான் புரிகிறது
என் அப்பா தன் பேத்தியை தன் அம்மா பேரை சொல்லி ஏன் அடிக்கடி அழைக்கிறார் என்று...

இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து நான் என் அம்மாவிற்கு கொடுத்துளேன் 'முதன்மை இடம்'.எத்தனை ஆராய்ச்சிகள் செய்திடினும் அம்மா HOLDS THE FIRST RANK IN EVERYONE'S LIFE.