Wednesday, June 3, 2020

பஞ்சத்து ஆண்டி


ஒரு வாரம்  திருவிழாவிற்கு என்று வந்த நானும் என் மகளும் மூன்று மாதங்களாக அம்மா அப்பா வீட்டில்  ஊரடங்கு காரணமாக மாட்டிக்கொண்டோம். படிப்பதற்கு புத்தகங்கள் தேடிக்
கொண்டிருந்தேன். தலையணை போல் இருக்கும் புத்தகங்களை பார்த்தாலே  எனக்கு பயம். பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். பெங்களூரில்  இருந்து  வந்திருந்த என் தம்பி அப்படி ஒரு குண்டு  புத்தகத்தை என்னிடம்  கொடுத்து படிக்க சொன்னான். ஒரு கதையை படிக்க சொல்லி, பிடித்தால் தொடரவும் என்றான்.தி. ஜானகிராமன்  சிறுகதைகள்  தொகுப்பு, கதை - சிலிர்ப்பு.கதையில்  ஒன்றுமே இல்லை. வெறும்  ஒரு ரயில் பிரயாணம். அதில் நிகழும் ஒரு சந்திப்பு. அவ்வளவே!அந்த  சந்திப்பை  அத்துணை நுண்ணியமாக  செதுக்கி  படிப்பவர்களை சிலிர்க்க  செய்திருந்தார். தினம் ஒரு கதை என மேலும் படிக்க ஆரம்பித்தேன்.

அம்மா வீடென்பதால்  காலை எனக்கு  9.30-10 மணிக்கு தான் விடியும். அன்று ஏதோ சப்தம்  கேட்டு காலை 7.00 கே விழித்து  கொண்டேன். தெருவில்  ஒரு குரங்காட்டி  நின்றிருந்தான். அந்த அழகான  குட்டி குரங்கு என் அம்மா கொடுத்த வாழைப்பழத்தை  லபக்கி கொண்டிருந்தது. அவர்கள் சென்ற பிறகு அம்மா சொல்லி கொண்டிருந்தார், குரங்காட்டிக்கு  நல்ல வசதியான குடும்பமாம். சொத்துக்கள் அழிஞ்சு போச்சுதென்று... எனக்கோ  பஞ்சத்து ஆண்டியில்  வரும் நன்னையன் ஞாபகம் தான் வந்தது. அந்த குரங்கு வைத்தியலிங்கம் மின்சார கம்பத்தில் அடிபட்டு இறக்காமல் இருந்திருந்தால் இப்படி தான் சுற்றிக்கொண்டிருக்கும் என தோணிற்று. யார் கண்டது இது வைத்தியலிங்கத்தின் மறுபிறவியாக கூட இருக்கலாம். பஞ்சத்து  ஆண்டி  என்று இல்லை. தி.ஜா வின் கதைகள் அனைத்துமே கதைகள்  அல்ல. நிகழ்வுகளும் உரையாடல்களும்  என்று சொல்லலாம். அந்த கதாபாத்திரங்கள் நம்மிடையே கண்டிப்பாக வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். நீங்களோ நானோ  கூட ஒரு கதாபாத்திரமாக இருக்கலாம்.

அவரின்  உலகத்தரமான கதைகளை விமர்சிக்க  என்னால் இயலாது. வியக்க  மட்டுமே முடியும் !

No comments:

Post a Comment