Friday, April 1, 2011

வரிக்குதிரை


வெள்ளை தாள் கறுப்பு பேனா
நடுராத்திரி நிலா
இரட்டை ஜடை பின்னல் வெள்ளை ரிப்பன்
நீதி தேவதை பொம்மை
கல்லூரியின் black n white day
மெய் பொய் கலந்த விழிகள்
பாவ மன்னிப்பு சிவாஜி கணேசன்
கரும்பலகை chalk piece
chess board என்று....

என் விருப்பங்கள் அனைத்திலும் கலந்திருப்பது கறுப்பும் வெள்ளையும். இவ்வாறாக என் கறுப்பு வெள்ளை விருப்பங்களில் முதலிடம் பெறுவது என் சிறு வயது புகைப்படங்கள்.ஆம் என் புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை என் சிறு வயது கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்.'All the credit goes to the photographer' என்று ஒரு வரியில் கூறி முடிக்க இயலாது.அந்த photoகள்,அதன் பின் எழுதப்பட்டுள்ள தேதி,மாதம்,வருடம் மற்றும் என் வயது எல்லாம் நான் ஒவ்வொரு முறை அவைகளை பார்க்கும் போதும் என்னை பிரமிக்க வைக்கின்றன.என் மாமா Prof.RK தான் இந்த photoகளின் சொந்தகாரர்.அவர் வயதில் இளைஞர்கள் செய்யும் 'வேலை'களை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு புகைப்பட கலைக்காக அவர் செலவிட்ட நேரங்கள் மிக அதிகம்.நாட்டியாஞ்சலி,இயற்கை காட்சிகள் என்று இன்றும் அவர் எடுத்த ஒவ்வொரு கறுப்பு வெள்ளை படமும் ஒரு காவியம்.கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டு என்று அவை நிரூபித்தன.

இப்படித்தான் ஆரம்பித்தது என் கறுப்பு வெள்ளை காதல்.என்ன தான் உள்ளது இந்த black n white யில் என கொஞ்சம் சுய ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அந்த புகைப்படங்களில் என் கண்ணுக்கு தெரிவது மூன்று மட்டுமே.. கறுப்பு,வெள்ளை மற்றும் அந்த புகைப்படத்தின் ஏதோ ஒரு நோக்கம்.என் monochrome மூளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிந்து கொள்ளும் திறன் தான் உள்ளது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.சிலருக்கு கனவுகள் மட்டும் கறுப்பு வெள்ளை யில் காண்பர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.என் கனவுகளின் நிறம் என்ன என்பது எனக்கு நினைவில்லை. 'கறுப்பு வெள்ளை' விருப்பம் என் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்ததை உணர்ந்தேன்.ஆம் நான் மனிதர்களையும் இரண்டு விதமாக காண தொடங்கி இருந்தேன்.நல்லவர்கள்.கெட்டவர்கள்.இதில் நல்லவர்கள் சிலநேரம் கெட்டவர்களாயினர்.கெட்டவர்கள் சிலநேரம் நல்லவர்களாயினர்.நல்லவர்களை முழுவதும் நம்பினேன்.கெட்டவர்களை முழுவதும் வெறுத்து ஒதுக்கினேன்.என் முழு நம்பிக்கை வீணான காலங்களில் நல்லவர்கள் கெட்டவர்களாயினர்.என் அதீத வெறுப்பு அலுத்த நேரங்களில் கெட்டவர்கள் நல்லவர்களாயினர்.இப்படியான சுழற்சியில் என் காலமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை.ஆனாலும் ஒரே நபரை இரண்டு(இரண்டே)வண்ணங்களில் காண கஷ்டமாக இருந்தது.அதையும் தாண்டி அவர்களின் பல்வேறு ரூபங்களை (வண்ணங்களை) என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.சட்டென்று என் மகளின் கையிலுள்ள சிலேட் பல்பத்தை பிடுங்கினேன்.மாறாக அவளுக்கு வண்ண சாக்பீசு களை கொடுத்தேன்.அவளாவது வாழ்க்கையில் வண்ணங்களை அதிகம் பயன்படுத்தடுமே என்று.

இந்த பதிப்பை முடிக்கும் தருவாயில் என் கறுப்பு வெள்ளை காதலில் ஒரு சின்ன தடுமாற்றம்.
ஆம் என் தலையில் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள் எட்டி பார்க்கின்றன.