
மார்கழி 01 ,1995
5.05 am
அரை பரிட்சைக்காக வைத்த அலார ஓசைக்கு முன் ஒரு இனிய ஓசை கேட்டது. 'டிங்சக் டிங்சக்' என்ற அந்த மெல்லிய ஓசை வேறெதுவும் இல்லை.பஜனை குழுவை சேர்ந்தது தான்.'ச்சச 5.30 க்கு எழுந்துரிக்கலாம்னா முன்னாடியே disturb பண்ணிட்டாங்களே' என்று திரும்பவும் போர்வைக்குள் புகுந்தேன் நான்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் 'ரம்மி படிக்கணும்னியே எழுந்திரி 'என்று காலை வருடினார் என் பாட்டி.'இதுக்கு அந்த பஜனை கோஷ்டியே தேவல' என்று முணுமுணுத்தபடி எழுந்தேன் நான்.பல் விளக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்த போது 'அல்லா...'என்ற தொழுகை சத்தம் என் வீட்டு பின்னால் இருக்கும் மசூதியில் இருந்து ஒலித்தது.அட மணி 5.30 ஆ என்று அவசர அவசரமாக முகத்தை அலம்பியபடி திண்ணைக்கு வந்தேன்.
வாசற்பூட்டு திறக்கப்பட்டு இருந்தது.கதவை திறந்து வெளியே வந்த என்னை சில்லென்ற குளிர் காற்று அள்ளி சென்றது."மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் மிக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனை சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. " என்று தமிழ் வாத்தியார் நடத்திய " தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்"பாடம் நினைவிற்கு வந்தது.
'மப்ளர் போடாம வெளியே நிக்காதே டா' ன்னு ஒரு கையில் மப்ளரும் மறு கையில் காபியை யும் நீட்டினார் என் பாட்டி.'இதென்ன ரெண்டாவது டிகாஷனா?' என்று ஒரே மடக்கில் காபியை குடித்த என்னை பாவமாக பார்த்த என் பாட்டியின் பெயர் ஆண்டாள். அட இந்த பெயர் கூட மார்கழியுடன் ஒத்து போகிறதே.
' படிச்சு முடிச்சுயா?' என்ற படி என்னிடம் வந்தார் என் அம்மா.' English II தான் ம்மா Non-detail மட்டும் ஒரு glance விட்டா போதும்.மத்த letter writing,hints developing லாம் நான் பாத்துப்பேன்.சரி நீ சீக்கிரம் கோலம் போட்டுட்டு சொல்லு,நான் கலர் குடுக்கறேன்' என்றேன்.
எனக்கு பிடித்த பூஜை கூடை கோலம் போட்டு இருந்தார் என் அம்மா.ஆஞ்சேநேயர் கோவிலுக்கு வெண்பொங்கல் வாளி போகிறதா என்று நோட்டமிட்ட படி ஒரு வழியாக கலர் போட்டு முடித்த நான், என் non-detail book யினை திறந்தேன்.
'அம்மா....... பால் ' என்ற பால்காரர் சத்தம் கேட்டு ஓடி சென்று கோலத்தை பார்த்தேன்.'நல்ல வேளை மிதிபடவில்லை'
'ஐயோ அடுத்து பேப்பர் பையன் வருவானே' என்ற பயத்துடன் வெளியிலேயே chair போட்டு படிக்க ஆரம்பித்தேன். கொண்டை நிறைய டிசம்பர் பூக்களை சூடி வந்தார் என் வீட்டில் வேலை செய்யும் லட்சுமி.அவரிடம் 'ஏன் இவ்ளோ லேட்?கோலத்தை மிதிக்காம உள்ளே போங்க' என்றேன்.
ஒரு வழியாக ஸ்கூல் புறப்பட்ட என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது 'non-detail ' அல்ல.' கலர் கோலம்' மட்டுமே.சாயங்காலம் வரை அதை யாரேனும் மிதித்து கலைத்து விட போகிறார்களோ என்ற கவலை மட்டுமே.
--------------------------------------------------------------------------------------------
மார்கழி 01, 2011
தெருவை அடைத்து நிற்கும் அழகு கோலங்கள்
பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து அதில் செருகிய பரங்கிப்பூ
ஆஞ்சநேய கோவிலின் தொன்னை பொங்கல்
கலர் கலராய் டிசம்பர் பூக்கள் ....
எதையுமே காண முடிய வில்லை சென்னை மாநகரத்தில்.....
என்ன தான் இன்று உங்கள் வீடுகளில் inverter போட்டாலும் உங்கள் மனம் அந்த பழைய மின்வெட்டு இருளையும்,candle வெளிச்சத்தையும் நினைத்து பார்க்காமலா போய்விடும்?
அப்படித்தான் இதுவும்.